மக்களவை 2024 - போட்டியிடும் வாரிசுகள் புதிய தலைமுறை
இந்தியா

மக்களவை தேர்தல் 2024 | வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள்... யார் யாருக்கு எந்தெந்த தொகுதி?

தேர்தல் களத்தில் எப்போதும் எதிரொலிக்கும் வார்த்தை வாரிசு அரசியல். இம்முறையும் அது எதிரொலிக்கிறது. இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் சீட் பெற்ற வாரிசுகள் யார் யார்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

PT WEB

திமுக

ஆளும் திமுக கட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவில் அமைச்சராக உள்ள துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த்திற்கு மீண்டும் வேலூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்த் - தமிழச்சி தங்கபாண்டியன் - கனிமொழி

மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனுக்கும், தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனான அருண் நேரு முதன்முறையாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக

அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென் சென்னையில் போட்டியிடுகிறார். முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு தனித்தொகுதியான நீலகிரி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கை ராமச்சந்திரன் - ஜெயவர்தன் - லோகேஷ் தமிழ்ச்செல்வன்

முன்னாள் எம்.எல்.ஏ சிங்கை கோவிந்தராஜனின் மகன் சிங்கை ராமச்சந்திரனுக்கு கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாஜக

பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை மக்களவை தொகுதியிலும், ராதிகா விருதுநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தமிழிசை - ராதிகா

பாமக

பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகளுமான சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதி வேட்பாளராக முதல்முறையாக களமிறங்குகிறார். அவரது அண்ணனான விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சௌமியா அன்புமணி - விஷ்ணு பிரசாத்

காங்கிரஸ்

காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, அத்தொகுதியின் முன்னாள் எம்.பியும் தொழிலதிபருமான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதிமுக, தேமுதிக :

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அக்கட்சி சார்பில் திருச்சியில் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.