ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா வதந்தி காரணமாக ஒரு குடும்பத்தினர் கடந்த ஐந்து நாட்களாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது ராம்கர் மாவட்டம். இதன் எல்லைக்குள்தான் முருதி கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு குடும்பத்தினருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக வதந்தி பரவியது. ஆகவே அந்த ஊர்க்காரர்கள் கடந்த ஐந்து நாட்களாக அந்தக் குடும்பத்தை விலக்கி வைத்துள்ளனர். மொத்தம் நான்கு பேர் இந்தக் குடும்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் யாரையும் கிராமத்தில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை குழாயிலிருந்து குடிநீர் எடுக்கவிடாமல் தள்ளிவைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே இவர்கள் அனைவரும் குடிக்க நீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் இந்த வீட்டாரின் குழந்தைகள் பசியுடன் அழும் காட்சிப் பதிவாகி இருந்தது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் வீடியோவை வேகமாகப் பரப்பினர். அதன் அடிப்படையிலேயே இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. மேலும் இந்தப் பிரச்னை அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனையறிந்த அவர், இந்தச் சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் அந்தக் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கும்படியும் ராம்கர் மாவட்ட துணை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கொண்டு ஹேமந்த் சோரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “வதந்திகளில் கவனம் செலுத்த வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் சூழ்நிலையில், கொரோனா வைரசை மற்றும் வதந்தியை சமூகத்தின் ஆதரவுடன் மட்டுமே நாங்கள் எதிர்த்துப் போராட முடியும் ”என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கீதா தேவி, “நான் ஜார்க்கண்ட் மாநில வாழ்வாதார மேம்பாட்டுச் சங்கத்தின் (ஜே.எஸ்.எல்.பி.எஸ்) கீழ் தீதி கிச்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்தக் காலக்கட்டத்திலும் ஏழைகளுக்கு உணவளிக்கிறேன். கிராமத்தில் பல குடும்பங்கள் ரேஷன் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் அவர்களுக்கு ரேஷன் பெற உதவினேன்” என்று கூறியுள்ளார். கடந்த 18 ஆம் தேதி அன்று, இவர் தீதி சமையலறை மூலம் ஏழைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, சில கிராமவாசிகள் வந்து இவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், “நான் அவர்களிடம் எப்படி என்று கேட்டேன்? அவர்களில் ஒருவர் எனது அண்ணி சத்தீஸ்கரில் இருந்து வந்தவர் என்றும் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். என் வீட்டில் யாரும் எங்கிருந்தும் வரவில்லை என்பதை அவர்களுக்கு நம்ப வைக்க முயன்றேன். ஆனால், அவர்கள் என்னை உணவு பரிமாற அனுமதிக்கவில்லை.
எங்களை தண்ணீர் எடுக்க விடவில்லை. தண்ணீர் இல்லாததால் அன்றைக்கு உணவு சமைக்கவில்லை. கிராமவாசிகள் தவறாக நிரூபிக்கும் முயற்சியில், குடும்பத்தினர் அனைவரையும் கடந்த 19 ஆம் தேதி அன்று கொரோனா வைரஸ் பரிசோதனைக்காகக் கோலாவுக்கு அழைத்துச் சென்றனர். அறிக்கை நெகடிவ் என வந்தது. ஆனால் சுகாதார அதிகாரிகள் எங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்”என்று தேவி கூறியுள்ளார். இவரது கணவர் ஈஸ்வர் குமார் ஒரு கூலித் தொழிலாளி. ஊரடங்கு உத்தரவால் இவரது கணவர் தற்போது வேலையில்லாமல் இருக்கிறார்.
முதல்வர் அறிவுறுத்திய பின்பும் கிராமவாசிகள் தங்களது செயல்களை மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இது பற்றி, “கிராமவாசிகளின் நடத்தையில் எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை. நாங்கள் வெளியே சென்றால், நாங்கள் தாக்கப்படுவோம் என்ற பயத்தில் வாழ்கிறோம்”எனக் கூறியுள்ளார் கீதா தேவி. இவர்களுக்கு கொரோனா இல்லை என்றால் எதற்காக மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என அவ்வூர் மக்கள் அறியாமையில் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
அறிக்கை நெகடிவ் என வந்திருந்தபோதிலும் இந்தக் குடும்பத்தைக் கிராமத்தை விட்டு வெளியேறும்படி அந்த ஊர்வாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.