manipur twitter
இந்தியா

வைரலான போலி வீடியோக்களால் பதற்றம்: மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!அதிர்ச்சியூட்டும் காட்சிகள்

சாதிரீதியான கருத்துக்களை காவல் வீரர்கள் கூறுவதுபோன்று போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்படுவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Prakash J

குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

மணிப்பூர் கலவரம்

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில், இதுவரை 175 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு முன்வந்திருக்கிறது. கலவரத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் என நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த மே 3ஆம் தேதி முதல் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மொபைல் இணைய சேவைகள் சமீபத்தில் மீண்டும் வழங்கப்பட்டது. என்றாலும், மணிப்பூரில் வாட்ஸ் ஆப் வழியே போலி வீடியோக்கள் பரவுவதால் இணையதளம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. சாதிரீதியான கருத்துக்களை காவல் வீரர்கள் கூறுவதுபோன்று போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்பட்டு பரப்பப்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

manipur

பெண் ஒருவர், கொல்லப்பட்டதாக வீடியோ வெளியானது. இதுதொடர்பான விசாரணையில், இந்த வீடியோ அண்டை நாடான மியான்மரில் நடந்தது என்பதும், அதை மணிப்பூரில் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது, மியான்மரில் இருந்து பரப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலமாக கிடந்த இந்த படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவிய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் இம்பாலில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறி தற்போதும் நிகழ்ந்து வருகிறது.