ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாகக் கூறி ஒரு லட்சம் போலியான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிய போது, ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். திருவிழாவில் பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா பரவியதால், அதில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 22 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாக, ஒரு லட்சம் போலியான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹரித்வார் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், ஒரே செல்போன் எண்ணைப் பயன்படுத்தி 50க்கும் மேற்பட்டோருடைய தகவல்கள் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் விரிவான விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கும்பமேளா தொடர்பான வழக்கு, உத்தரகாண்ட் நீதிமன்றம் விசாரித்து வந்த போது, தினமும் 50ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதனால் அந்த இலக்கை அடைவதற்காக, போலியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.