‘கவலைப்பட்ட குடிமகன்’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவரை, இருவர் தாங்கிப்பிடித்து அழைத்து வருகின்றனர். அவர் வெள்ளைத் தாடியுடன் கூன்முதுகு விழுந்த நிலையில் ஒரு கைத்தடி உதவியுடன் நடந்துவருகிறார். இதுகுறித்த பதிவில், ”இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ, கிட்டத்தட்ட 29 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ’அவருக்கு 110 வயது இருக்கும் என்றும், அவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்து துறவி’ என்றும் பதிவுகள் பதிவிடப்பட்டன. ஆனால், அதற்கும் சிலர் பதிலளித்துள்ளனர். ’இது முற்றிலும் தவறான தகவல். அந்த முதியவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் 'சியாரம் பாபா' என்ற இந்து துறவி ஆவார். அறிக்கைகளின்படி அவருக்கு சுமார் 110 வயது இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்த விவாதங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், உண்மையில் அந்த முதியவருக்கு 188 வயது அல்ல. அவர், குகையில் கண்டுபிடிக்கப்பட்டதும், அவருக்கு நபர்கள் உதவுவதும் உண்மையல்ல. அந்த முதியவர், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் 'சியாராம் பாபா' என்ற புனிதர் என்பதுதான் உண்மை. செல்வாக்கு செலுத்துபவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோல் வீடியோவைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஜூலை 2 தேதியிட்ட நவ்பாரத் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையில் அந்த முதியவரின் உண்மையான அடையாளம் தற்போது வெளிப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’சியாராம் பாபா’ என்ற முதியவருக்கு வயது 109. சியாரம் பாபா இப்பகுதியில் பிரபலமானவர் மற்றும் மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் வசித்துவருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.