7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 3-ஆம் கட்டமாக மே 7 (நாளை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக ஜுன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்தச் சூழலில் அத்தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்ததாகவும், அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் சென்றதாகவும் இணையதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உண்மை கண்டறியப்பட்டது.
இணையத்தில் வைரலாகும் அந்தப் புகைப்படும் கடந்த ஜுன் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஆம், திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்தபோது, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த அந்தப் புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக, இதில் எந்த உண்மையுமில்லை எனத் தெளிவாகிறது.
மேலும், வாரணாசி மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடி இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர், மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.