இந்தியா

#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்?: உண்மை என்ன?

#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்?: உண்மை என்ன?

webteam

புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தான BBV152ஐ மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்குச் செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தகட்ட சோதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகமும் இந்தப் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஜூலை7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.மேலும் சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் கிசிச்சைக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக இந்தியா அளவில் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாரத் பயோடெக் தொடர்பாகவும், தடுப்பு மருந்து சோதனை தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவின. அதாவது, ''ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்தை அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் விகே ஸ்ரீனிவாஸ் தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார். இந்தியாவில் தனது மருந்து மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தானே முதல் மனிதராக சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறார் டாக்டர் ஸ்ரீனிவாஸ் என செய்தி பரவியது. அதோடு ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இது உண்மையான தகவலா என்பது குறித்து பார்ப்போம்.

(இணையத்தில் பரவும் புகைப்படம்)

பாரத் பயோடெக்கின் விளக்கம்:

பாரத் பயோடெக் பெயரில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படமும் செய்தியும் எங்களால் அறிவிக்கப்பட்டது இல்லை. அந்த புகைப்படம் வழக்கமாக செய்யப்படும் ரத்த பரிசோதனை முறை தான்.மக்களின் ஆரோக்யத்திற்காக கோவிட்19க்கான பாதுகாப்பான தீர்வை நோக்கி நாங்கள் பணி செய்கிறோம். கொரோனா தடுப்பு மருந்துக்கான எல்லா தரமான முறைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து பின்பற்றுவோம். உங்களின் ஆதரவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளது.

(பாரத் பயோடெக்கின் விளக்கம்)

எனவே சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படமானது வழக்கமான ரத்த பரிசோதனை முறைதானே தவிர கொரோனா தடுப்பு மருத்தை உட்படுத்துவது இல்லை என்பதும், அது தொடர்பான செய்தியும் பொய்யானது எனவும் பாரத் பயோடெக் தெளிவுபடுத்தியுள்ளது.