இந்தியா

ஃபேஸ்புக்கில் பழகி, பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி!

ஃபேஸ்புக்கில் பழகி, பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி!

webteam

ஃபேஸ்புக் மூலம் பழகி, பெண் டாக்டரிடம் ரூ.11.43 லட்சத்தை மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை பரேல் பகுதியில் வசிப்பவர், 38 வயது பெண் டாக்டர். இவர் கணவர் ஜம்மு - காஷ்மீரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு பேஸ்புக்கில், பியாரோ மேட்ரிக் ஜான் என்வரிடம் இருந்து ஒரு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் வந்திருந்தது. அதை ஓகே செய்தார் டாக்டர். ஜான் இத்தாலியை சேர்ந்தவர் என கூற, முகம் தெரியாத அவருடன் நட்பானார் பெண் டாக்டர். இதையடுத்து அடிக்கடி பேஸ்புக்கில் பேசி வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரவி சின்கா என்பவரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ’டெல்லியிலுள்ள டெல்டா கார்கோ என்ற நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். இத்தாலியில் இருந்து ஜான் என்பவர் உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறார். வரி கட்டவேண்டும். அதைக் கட்டினால் பார்சலை எடுத்துக்கொள்ளலாம்’ என்றார் அவர். டாக்டர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள பேஸ்புக்கில் ஜானை தொடர்பு கொண்டார். 

‘ஆமா. நான்தான் கிஃப்ட் அனுப்பியிருக்கிறேன்’ என்றார் ஜான். இதை உண்மை என்று நம்பி, ரவி சின்கா குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.17 ஆயிரம் பணத்தைக் கட்டினார்.
பிறகு மீண்டும் பேசிய அந்த சின்கா, ‘பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள யூரோ இருக்கிறது’ எனக் கூறி மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அவர் தெரிவித்த தனித்தனி வங்கி கணக்குகளில் ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் வரை செலுத்தினார் பெண் டாக்டர். அந்த நபர் இன்னும் பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்க, சந்தேகம் அடைந்த பெண் டாக்டர், விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அவருக்கு எந்த பார்சலும் வரவில்லை என்பது தெரியவந்தது. 
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், தாதர் போய்வாடா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.