மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர், அன்னா செபாஸ்டியன் பேராயில். 26 வயது இளம்பெண்ணான இவர், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராக, கடந்த மார்ச் 19ஆம் தேதி பணிக்குச் சேர்ந்தார். அடுத்த நான்கு மாதத்தில், அதாவது கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன், கட்டிலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அன்னா உயிரிழந்து 2 மாதங்களாகும் நிலையில், அவர் பணிபுரிந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு அன்னாவின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், “அன்னாவின் முதல் பணி இது. உங்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், 4 மாதங்களிலேயே அதிக பணிச் சுமையால் உயிரிழந்துள்ளார். அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேலாளருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை. எனது குழந்தையின் உயிரிழப்பு, அந்த நிறுவனத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என எழுதியிருந்தார். இந்தக் கடிதம் இணையத்தில் எதிர்வினையாற்றியது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.
அந்தக் கடிதம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அந்தக் கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறியிருந்ததுடன், அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அன்னாவின் தாயார் எழுதிய கடிதத்திற்கு எர்னஸ்ட் அண்ட் யங் (EY) இந்திய தலைவர் ராஜீவ் மேமானி பதிலளித்துள்ளார். அவர், ”அன்னாவின் இறுதிச்சடங்கில் நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் கலந்துகொள்ளாதது அவர்களின் கலாசாரத்திற்கு அந்நியமானது. ஒரு தந்தையாக, தனது இதயத்தை உடைக்கும் வகையில், கடிதம் எழுதிய தாயின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில், அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
சமூக ஊடகங்களில் நமது நிறுவனத்தின் சில பணி நடைமுறைகள் குறித்து மக்கள் கருத்து தெரிவித்ததை அறிந்தேன். எங்கள் நிறுவன ஊழியர்களின் நல்வாழ்வே எனக்கு முக்கியம். மேலும், இந்த பிரச்னையை நான் தனிப்பட்ட முறையில் தீர்க்க வழிவகுப்பேன். இணக்கமான பணியிடத்தை வளர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த நோக்கம் நிறைவேறும்வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அன்னா செபாஸ்டியன் பேராயில் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர், "மிகவும் துக்ககரமானது. ஆனால் பல நிலைகளில் கவலையளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல் இதுதொடர்பாக விசாரணையை கோரியிருக்கும் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, "அன்னாவின் சோகமான இழப்புக்கு ஆழ்ந்த வருத்தம்" எனத் தெரிவித்துள்ளார். தற்போது, செபாஸ்டியன் பேராயில், பாதுகாப்பற்ற மற்றும் சுரண்டல் நிறைந்த பணிச்சூழல் பற்றிய முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம், எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணிபுரிந்த தனது மனைவியின் கொடூரமான அனுபவத்தை பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஆகாஷ் வெங்கடசுப்ரமணியன் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் “EY நிறுவனத்தின் நச்சு வேலை கலாசாரம் காரணமாக எனது மனைவி வேலையை விட்டுவிட்டார்.
ஒருவேளை, அவர் அந்த வேலையை விடவில்லை என்றால், அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) 18 மணி நேர வேலை நாட்களை இயல்பாக்குவதும் பெருமைப்படுத்துவதும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ள அவர், ”அன்னா செபாஸ்டியன் பேராயிலின் மரணமே, கடைசியாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.