இந்தியா

புலம்பெயர்ந்தவர்கள் செல்வதற்கு 10 நாள்களுக்கு 2600 சிறப்பு ரயில்கள் - இந்திய ரயில்வே

புலம்பெயர்ந்தவர்கள் செல்வதற்கு 10 நாள்களுக்கு 2600 சிறப்பு ரயில்கள் - இந்திய ரயில்வே

jagadeesh

பல்வேறு மாநிலங்களில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அடுத்த 10 நாள்களில் 2600 ஷராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் "கடந்த 23 நாளில் 2600 ஷராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் சென்றுள்ளனர். மேலும் சில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பதால் அடுத்த 10 நாள்களுக்குக் கூடுதலாக 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் இதற்கென நிலையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய நடவடிக்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் படிப்படியாக ரயில் மூலமும் பேருந்துகள் மூலமும் சொந்த மாநிலங்களுக்கு அவர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் ஆந்திரம், டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்ட்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.