இந்தியா

ஆய்வுக்கு பிறகு கேரளாவுக்கு கூடுதல் நிதி- மத்திய அரசு விளக்கம்

Rasus

கேரள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு கூடுதல் நிதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும் என மாநில அரசு கேட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் நிதியை கேரளாவுக்கு அளித்துள்ளது. இந்தச் சூழலில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவுக்கு அளித்துள்ள 600 கோடி ரூபாய் முதல்கட்ட நிதி மட்டுமே என விளக்கியுள்ளது.

வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்து பின்னர், தேசியப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து விதிமுறைகள் படி கூடுதல் நிதியுதவி அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சரியான நேரத்தில் உரிய பொருட்களை மத்திய அரசு அளித்ததாகவும், 40 ஹெலிகாப்டர்கள், 31 விமானங்கள், 182 மீட்புக் குழுவினர், பாதுகாப்பு படையை சேர்ந்த 18 மருத்துவ குழு, தேசியப் பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 58 குழு மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சுமார் 500 படகுகளுடன் கேரளாவுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.