எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. ஒருபடி மேலாக சென்று #StopHindiImposition உலக அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்தது.
இந்நிலையில், இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.