வெடி பொருட்கள் பறிமுதல் pt desk
இந்தியா

பெங்களூரு: தனியார் பள்ளியின் முன் வெடிபொருட்கள் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை

பெங்களூருவில் தனியார் பள்ளியின் முன், டிராக்டரில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூர் வைட் பீல்ட் சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு பின் தற்போது வெடி பொருட்கள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கை, என்.ஐ.ஏ மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை.

வெடி பொருட்கள் பறிமுதல்

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், நகரின் பெல்லந்தூர் சிக்கநாயகனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி எதிரில், ஒரு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், டிராக்டரில் என்ன உள்ளது என்று, அங்கிருந்த தொழிலாளர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் சரியாக பதில் சொல்லாததால் சோதனை நடத்தினர்.

அப்போது அதில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உட்பட பல வெடி பொருட்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வந்து, பரிசோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். கட்டடம் கட்ட பாறைகள் உடைக்க இந்த வெடி பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.