பிரதமர் மோடி, ராகுல் காந்தி pt web
இந்தியா

விவாதத்தை கிளப்பிய கருத்துக்கணிப்பு முடிவுகள்; 2014, 2019 தேர்தல்களில் கணிப்புகள் சரியாக அமைந்ததா?

PT WEB

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல், நேற்றுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன.

யோகி, பிரதமர் மோடி, ராகுல்காந்தி

இந்த கருத்து கணிப்புகளை சுட்டிக்காட்டி தேசிய ஜனநாயக கூட்டணி, தாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி என கூறும் நிலையில், இந்தியா கூட்டணி, கருத்து கணிப்பு முடிவுகளை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறது..

இதனையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகளை சரியாக கணிக்குமா என விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலின்போதும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சரியாகவே இருந்துள்ளன..

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 முதல் 289 இடங்களை வெல்லும் எனவும், பாஜக மட்டும் 236 முதல் 249 தொகுதிகளில் வெல்லும் என கூறியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 முதல் 115 இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ் கட்சி மட்டும் 70 முதல் 78 இடங்கள் வரை வெல்லும் என தெரிவித்தது.

மத்திய பிரதேசம் தேர்தல்

உண்மையில், தேசிய ஜனநாய கூட்டணி கணிக்கப்பட்டதை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. அக்கூட்டணி 336 இடங்களில் வென்ற நிலையில், பாஜக மட்டுமே 282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி கட்டிலில் ஏறியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 60 இடங்களை மட்டுமே வென்றது.. கூட்டணிக்கு தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியோ வெறும் 44 இடங்களை மட்டுமே வென்றது..

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி 277 முதல் 306 இடங்கள் வரை வெல்லும் எனவும், பாஜக மட்டும் 250 முதல் 286 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் தெரிவித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 95 முதல் 120 இடங்கள் வரை வெல்லும் என கூறியது. காங்கிரஸ் மட்டும் 50 முதல் 64 இடங்களை வெல்லும் என்றது ..

பாஜக - காங்கிரஸ்

உண்மையில் தேசிய ஜனநாய கூட்டணி 352 இடங்களை வென்றது. அவற்றில் பாஜக மட்டுமே 303 தொகுதிகளை வென்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ, 93 இடங்களையே வென்றது. காங்கிரஸ் 52 இடங்களையும் பெற்றது

தற்போதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், முடிவை சரியாக கணித்திருக்கிறதா என்பது, வரும் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்...