சந்திரசேகரராவின் மகள் கவிதா புதிய தலைமுறை
இந்தியா

#EXCLUSIVE | “எங்களுக்கு மாற்றுக்கட்சி யாருன்னா...” - சந்திரசேகர ராவ் மகள் பளிச் பதில்!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

PT WEB

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் நம்மோடு பகிர்ந்துக்கொண்ட விஷயங்கள், இங்கே...

“வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைப்போம் என முழுமையாக நம்புகிறேன். தேர்தல் பரப்புரை நல்லபடியாக சென்றுகொண்டு இருக்கிறது. மாநில மக்களுக்காக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். பாரத் ராஷ்டிர சமிதி கட்சி மக்களுக்கான கட்சி. எல்லா நேரங்களிலும் மக்களுடன் இருந்திருக்கிறோம்.

சந்திரசேகர ராவின் மகள் கவிதா

தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து மருத்துவ இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். வருடம் 10,000 மருத்துவர்களை உருவாக்கும் அளவிற்கு தெலங்கானா மாநிலத்தை மாற்றியுள்ளோம். தெலங்கானாவில் முதலில் 10 மாவட்டங்கள் இருந்தன. இப்போது 33 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். இதன் மூலம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும்.

இங்கு நீட் தேர்வு ஒரு பெரிய பிரச்னையாக இல்லை. தமிழகத்தில்தான் எதிர்ப்பு உள்ளது.
இங்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் இருந்தாலும் பெரும்பாலான கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகவே உள்ளன. மருத்துவ இடங்கள்அதிகரிக்கப்படுவதால் அது ஒரு பிரச்னையாக இல்லை

தெலங்கானாவை பொறுத்தவரை பாஜகவை நாங்கள் விரும்பவில்லை. அவர்களுக்கான ஆதரவு இங்கு எதுவும் இல்லை. கடந்த தேர்தலில் 105 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்தது.

தெலங்கானா மாநிலம் மதச்சார்பற்ற மாநிலமாக இருப்பதால் இங்கு பாஜகவுக்கு இடம் இல்லை. காங்கிரஸைதான் எங்களுக்கான போட்டியாளராக பார்க்கிறோம்.

ஆனால் காங்கிரஸும் கடந்த முறை 20க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றது. இந்த முறையும் 20க்கும் குறைவான இடங்களே அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவையில் இப்போது நாங்கள் 104 இடங்களை கையில் வைத்துள்ளோம். அரசியலில் மாற்றுக்கட்சியாக காங்கிரஸை மட்டுமே பார்க்கிறோம். அதனால்தான் பிஆர்எஸ்-ல் இடம் கிடைக்காதவர்கள் காங்கிரஸுக்கு செல்கின்றனர்.

மக்கள் காங்கிரஸை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தெலங்கானா மக்களின் முதுகில் பலமுறை குத்தியுள்ளது.

60 வருடங்களாக காங்கிரஸால் பல துன்பங்களை சந்தித்து வந்தோம். 1996ஆம் ஆண்டு தனிமாநிலம் கேட்டு போராடிய போது 400 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் பலமுறை துரோகம் செய்துள்ளது. இருப்பினும் பி.ஆர்.எஸ்-க்கு மாற்று கட்சியாக கங்கிரஸ் தான் உள்ளது.

காங்கிரஸ் எங்களுக்கு பலமுறை நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. நாங்கள் போராடியபோது பாஜக-வும் எங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தெலங்கானா மாநிலத்துக்கு என்று எதுவும் கிடைக்கவில்லை. புதிதாக தோன்றிய மாநிலத்துக்கு பாஜக எதுவும் செய்யவில்லை. இந்த காரணத்தால்தான் காங்கிரஸின் I.N.D.I.A கூட்டணி மற்றும் பாஜக-வின் என்.டி.ஏ கூட்டணியில் நாங்கள் இணையவில்லை.

பாஜக, காங்கிரஸுக்கு நாங்கள் மாற்றாக உள்ளதால் எங்கள் கட்சியை தேசிய கட்சியாக மாற்றியுள்ளோம்.
சந்திரசேகர ராவின் மகள் கவிதா

I.N.D.I.A கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான். I.N.D.I.A கூட்டணி நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. ஐந்து மாநில தேர்தலுக்கு பின் கூட்டணி சிதறிவிடும். உத்தரப்பிரதேசத்தை பாருங்கள்... அங்கு அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து விமர்சித்து வருகிறார். அதேபோல் மேற்கு வங்கம், கேரளாவில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணியில் எப்படி அங்கம் வகிக்க முடியும்? தேர்தல் வரும் போதுதான் கூட்டணியில் உள்ள சிக்கல் வெளிப்படும்.