பிரிஜ் பூஷன், கரண் பூஷன், சாக்‌ஷி மாலிக் ட்விட்டர்
இந்தியா

உ.பி.| “நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்" வைரலாகும் சாக்‌ஷி மாலிக்கின் வருத்தப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் பாஜக சார்பில் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டி ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், எக்ஸ் தளத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்

Prakash J

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் கைசர்கஞ்ச் தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதிக்கு ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இத்தொகுதியின் பாஜக சிட்டிங் எம்பியும் முன்னாள் மல்யுத்த தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு அக்கட்சி மீண்டும் சீட் தரவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகன் கரண் பூஷன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னணி மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தனர். அத்துடன் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. தொடர்ந்து வீரர்கள் தாம் வாங்கிய பதக்கங்களை மத்திய அரசிடம் திருப்பி அளித்தனர். சாக்‌ஷி மாலிக்கோ, மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாகவே அவருக்கு சீட் வழங்க பாஜக மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”பாலஸ்தீனம் இறந்தால் மனிதநேயம் இறக்கும்” | இஸ்ரேலுடன் உறவை முறித்துக்கொள்வதாக கொலம்பியா அறிவிப்பு

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் பாஜக சார்பில் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டி ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், எக்ஸ் தளத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார். நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்றுவரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம்.

கைது செய்வதை விடுங்கள், இன்று பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள். ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக நம் அரசு உள்ளதா? ராமர் பெயரில் வாக்குகள் தேவை என்றால், அவர் காட்டிய பாதை என்ன?” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வாரணாசி| பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் காமெடி நடிகர்.. யார் இந்த ஷியாம் ரங்கீலா?