சந்தீப் கோஷ் எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை | மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ அதிரடி!

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ள நிலையில், சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், கொலை செய்யப்பட்ட மருத்துவரின் மருத்துவமனையில் முன்னாள் முதல்வராகப் பணியாற்றிய சந்தீப் கோஷிடம், கடந்த 15 நாட்களாக சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளது.

முன்னதாக மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் முதவல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் வேறொரு மருத்துவமனைக்கு அவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சந்தீப் கோஷை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்குப் பதில், அவரை நீண்டநாள் விடுமுறையில் இருக்கும்படி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. தொடர்ந்து, சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் | ஆஃபர் விலையில் திறக்கப்பட்ட மால்.. அரை மணிநேரத்தில் சூறையாடிய பொதுமக்கள்.. #ViralVideo

இதற்கிடையே, சந்தீப் கோஷிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தியது. தவிர, அவர் இரண்டு முறை பாலிகிராஃப் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார். மேலும், விசாரணையின்போது சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் வாக்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு தொடர்பாக சந்தீப் கோஷின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தீப் கோஷ் கைதை மாநில பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், “ஆதாரங்களை அழிக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு முயற்சித்தாலும், அவரது (சந்தீப் கோஷ்) ஊழல் மற்றும் தவறுகள் விரைவில் அம்பலமாகும். வங்காள மக்கள் உண்மைக்கு தகுதியானவர்கள், இந்த கைது அதை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “என் மகனின் வாழ்வை அழித்துவிட்டார்.... மன்னிக்கவே மாட்டேன்” - தோனியை விமர்சித்த யுவராஜ் சிங் தந்தை!