இந்தியா

‘இட ஒதுக்கீட்டுப் போராளி’ எனப் போற்றப்படும் வி.பி.சிங் பிறந்த தினம் இன்று..!

‘இட ஒதுக்கீட்டுப் போராளி’ எனப் போற்றப்படும் வி.பி.சிங் பிறந்த தினம் இன்று..!

webteam
இந்தியாவில் மாபெரும் அரசியல் சக்தியாகத் தி‌கழ்ந்தவர்களில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் ஒருவர். காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்ட அவரது பிறந்த தினம் இன்று.
இந்திய அரசியலில் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளுள் ஒருவர் வி.பி. சிங். ‌இட ஒதுக்கீட்டுப் போராளி என்றும் இவரை அழைக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய வி.பி.சிங்கின் முழுப் பெயர் விஸ்வநாத் பிரதாப் சிங். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகவும், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
போஃபர்ஸ் பீரங்கி ஒப்பந்தம் தொடர்பாக ராஜீவ்காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்து விலகிய அவர், அக்கட்சிக்கு எதிராக நாடு தழுவிய ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியைத் தோற்றுவித்து காங்கிரசுக்கு எதிராக மாபெரும் அலையை உருவாக்கி‌ மத்தியில் ஆட்சியைப் பிடித்த பெருமை இவருக்குண்டு. 
எதிரெதிர் துருவங்களான பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி செய்த வி.பி. சிங், தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக்காட்டியவர். சிறந்த பேச்‌சாளராக திகழ்ந்த வி.பி சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2008ம் ஆண்டு மரணமடைந்தார். கூட்டணி ஆட்சிக்காகவும், இட ஒதுக்கீடு தொடர்பான உறுதியான நடவடிக்கைகளுக்காகவும் வி.பி.சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.