செய்தியாளர்: கணபதி மற்றும் ஜெனிட்டா ரோஸ்லின்
வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தால் 14 காவலர்கள் உட்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தசூழலில், தனது சகோதரியான ஷேக் ரெஹனாவுடன், ஷேக் ஹஸீனா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபாபனை விட்டு, ஹெலிகாப்டர் மூலம் டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தை வந்தடைந்தார்.
ஹஸீனா நாட்டைவிட்டு வெளியேறிய தகவல் பரவ வங்கதேச நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். பலர் கைக்கு கிடைத்த பொருட்களை சுருட்டிக்கொண்டு செல்வதையும் காணமுடிந்தது. வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படுபவரும் ஷேக் ஹஸீனாவின் தந்தையுமான முஜிபூர் ரகுமானின் சிலையையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
டெல்லியில் தரையிறங்கிய ஹஸீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இந்தவகையில், இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள இவருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், ஹஸீனா லண்டன் செல்லும் வரை இங்கேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் வங்கதேசத்தில் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைசர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருவதாக எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மேலும், வங்கதேசம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கு பிராந்திய இயக்குனராக டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாகவும் தெரிகிறது. இங்கு அவர் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் , உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அரசு அளிக்கும் இடத்திலே தங்குவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதால், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அங்குள்ள இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்,வங்கதேசத்தில் தற்போது வெடித்த வன்முறைக்கு பின்புறத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே, இந்தியர்கள் தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.