மத்தியப் பிரதேசம் | தீயில் எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்! முகநூல்
இந்தியா

மத்தியப் பிரதேசம் | தீயில் எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

மத்தியப் பிரதேசத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று 93 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் மத்தியப்பிரதேசமும் ஒன்று. மத்தியப் பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவரின் மரணத்தால் ஏற்கெனவே நடைபெறாத பெதுல் தொகுதி உட்பட 9 தொகுதிகளில் தேர்தலும் நேற்றுதான் நடைபெற்றது. இதன்படி, மத்தியப் பிரதேசத்தில் நேற்று பதிவான வாக்கு சதவீதம் 66.05% ஆகும். பெதுல் மக்களவை தொகுதியில், 72.65 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பெதுல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட முல்தாய் சட்டசபை தொகுதியில், கோவுலா கிராமத்தில் நேற்று 11 மணி அளவில் வாக்குசேகரிக்கும் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 36 தேர்தல் பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

அப்போது, வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனத்தில் இருந்த பணியாளர்கள் பேருந்தில் இருந்து தப்பித்துள்ளனர். ஆனால், வாகனத்தின் உள்ளே இருந்த 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கு இறையாகி கருதி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெதுல் மாவட்ட ஆட்சியர் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். மேலும், தீ விபத்திற்கு காரணம் வாகனத்தில் ஏற்பட்ட தீப்பொறி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் அத்தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுமா என்பது குறித்த முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பலத்த ஏற்பாடுகளுக்கும், பாதுகாப்புக்கும் மத்தியில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் இந்த திடீர் விபத்து பெரும் அச்சத்தையும், பலத்த சந்தேகம் நிறைந்த கேள்விகளையும் எழுப்பி வருகிறது.