இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது எப்படி? டெமோ காட்டிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது எப்படி? டெமோ காட்டிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.

webteam

இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேராகக் கருதப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது எப்படி என்று டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அவரால் பதவி நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது குறித்து விவாதிக்க பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட கெஜ்ரிவால் அரசு அழைப்பு விடுத்தது.

அதன்படி கூட்டப்பட்டுள்ள கூட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்முறை விளக்கம் அளிக்கப் போவதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவர் அறிவித்திருந்தார். அதன்படி, பேரவையில் அவர் செயல்முறை விளக்கம் செய்துக் காட்டினார். செய்முறை விளக்கத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ரகசிய எண்ணை(பாஸ்வேர்ட்) பதிவு செய்து எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் வேண்டுமோ, எந்த வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டுமோ, அவர்களுக்கு வாக்காளர்களின் வாக்குகளை மாற்றி விடலாம் என்பதை செய்து காட்டினார்.

உதாரணமாக வாக்காளர்கள் ஆம் ஆத்மிக்கு 10 வாக்குகள், பிஎஸ்பிக்கு 2, பிஜேபிக்கு 3, காங்கிரசுக்கு 2 என்று வாக்களித்துள்ளனர் என்று வைத்துக்கொள்வோம், வாக்குப்பதிவு முடிந்த பிறகு ரகசிய எண்ணைப் பயன்படுத்தி ஆம் ஆத்மிக்கு 2, பிஎஸ்பிக்கு 2, பிஜேபிக்கு 11, காங்கிரசுக்கு 2 என்று மாற்ற முடியும் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் ரகசிய எண் தெரிந்த ஒரு திறமையான கணினி பொறியாளராக இருந்தால் இதுபோன்ற முறைகேட்டில் சுலபமாக ஈடுபடலாம் என்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ் தெரிவித்தார்.

டெல்லி சட்டசபையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம், இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் இயந்திரமே அல்ல என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.