நெருங்கி பழகியவர்கள் கூட அச்சத்தால் ஒதுங்கி நிற்கிறார்கள்’ புகைப்பட கலைஞரின் ஊரடங்கு அனுபவம்
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. கொரோனா குறித்த அச்சம் ஒரு பக்கம் என்றால், அதனால் கட்டாயமாக்கப்பட்ட ஊரடங்கு இன்னொரு பக்கம். ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் முதல் பாதி உணவை கொரித்த படி அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் குடும்ப தலைவர்கள் வரை அனைவரையும் வீட்டில் முடக்கிப் போட்டு விட்டது.
கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், அவை கொடுத்த இந்தக் கால இடைவெளி என்பது பலருக்கும் புது வித அனுபவத்தை கொடுத்திருக்கிறது. என்றே சொல்ல வேண்டும். இந்த அனுபவம் ஒரு புகைப்பட கலைஞருக்கு எப்படி அமைந்திருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
பொதுவாக புகைப்படக்காரர் என்றாலே அவருடைய பணியில் பயணம் என்பது மறுக்க முடியாத அங்கமாக இருக்கும். ஆகையால் அந்த அனுபவத்தை தெரிந்துகொள்ள, சினிமா பிரபலங்களின் ஆதர்சன புகைப்படக்காரரான கார்த்திக் ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டு பேசினேன். எப்போதும் பரபரப்பாக பேசும் கார்த்திக், இந்தச் சமயம் நிதானமாக பேசினார். அவரிடம் வரிசையாக கேள்விகளை முன் வைத்தேன்.
இந்த ஊரடங்கு உத்தரவு உங்களுக்கு எப்படி இருந்தது?
உண்மையில் சொல்லப்போனால் வருத்தமளிப்பதாவே அமைந்தது. காரணம் இந்த ஊரடங்கினால் புகைப்படத்துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொழுது போக்குத் துறையே கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு எனது நிறுவனத்திற்கு வந்த, மூக்கால் வாசி ஆர்டர்கள் திரும்ப பெறப்பட்டு விட்டன. ஆர்டர்கள் வந்த விழாக்களிலும், விழா நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டு, ஏழு நாட்கள் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடைபெற்றன. அதிலும் குறைவான நபர்களே கலந்து கொண்டனர். இந்த அனுபவம் புகைப்பட கலைஞனாக
எனக்கு வேறு அனுபவத்தை தந்தது.
ஊரடங்கால் புகைப்படத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன ?
கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களிடம் ஏற்பட்ட பயத்தையே புகைப்படத்துறைக்கு விழுந்த பெரிய அடியாக நான் பார்க்கிறேன். ஏனெனில் ஒரு தொற்று நோயின் மூலம், தற்போது மக்கள் ஏற்றிருக்கும் அனுபவம் அத்தகையானதாக மாறிவிட்டது. நெருங்கி பழகியவர்கள் கூட தற்போது அச்சத்தின் காரணமாக ஒதுங்கி நிற்க ஆரம்பித்து விட்டனர். இது குறித்து வெளிநாட்டு புகைப்படக்காரர்களிடம் நான் பேசிய போது, அவர்கள் இந்த நிலைமை சகஜ நிலைக்கு மாற ஓராண்டு பிடிக்கும் என்றும் எப்பொழுது கொரோனா தொற்று நோய், ஒரு சராசரி நோயாக மாறுகிறதோ அப்பொழுதுதான் இந்த நிலைமை மாறும் என்று கூறினர்.
வீட்டில் உங்களது பொழுதை எப்படி கழித்தீர்கள்?
வேலைப் பிரச்சனை, ஊழியர்களின் சம்பள பிரச்னை என பல இருந்தாலும் அதையெல்லாம் மறக்ககடிக்க வைத்து, என்னை சிலாகிக்க வைத்ததில் எனது இரு மகன்களுக்கும் பெரும்பங்கு உண்டு. முன்பெல்லாம் வீட்டில் குழந்தைகளை கவனிப்பதற்கு, வாகனம் ஓட்டுவதற்கு, சமைப்பதற்கு என எல்லாவற்றிற்கும் வேலையாட்கள் இருப்பார்கள். ஆனால் இந்த நாட்களில் யாருமே இல்லை. இதனால் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டிய கட்டாயம்.
இதனால் வீடு பெருக்குவது, சமைப்பது என எல்லாவற்றையும் நானும் எனது மனைவியுமே பார்த்துகொண்டோம். குழந்தைகள் விஷயத்தில் இவர்கள் இவ்வளவு சுட்டியாக இருப்பார்கள் என்பதை நான் இப்போதுதான் பார்த்தேன். குறிப்பாக எனது இராண்டாவது மகன், வீட்டில் தண்ணீரைக் கொட்டுவது, சண்டையிடுவது என தினமும் என்னை ஒரு கை பார்த்து விடுவான்.
மதிய வேளைகளில் எனது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை எடுத்து, அவர்களுக்கு அப்போழுதே வீட்டிலேயே செய்வது போன்ற பயிற்சிகளை வழங்குவேன். மாலை வேளையில் பழைய நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவேன். இரவு நேரத்தில் நானும் மகன்களும் இணைந்து ஏதாவது ஒரு படம் பார்ப்போம். அப்படியே அந்த நாள் முடிந்து விடும்.
கொரோனா ஒரு கொடிய தொற்று நோயாக இருந்த போதிலும், ஜப்பான், தாய்லாந்து, போன்ற நாடுகள் அதை லாவகமாக கையாண்டுள்ளுனர். அதற்கு காரணம் அந்த அரசின் துரித நடவடிக்கையும், மக்களின் ஒத்துழைப்புமே. ஆகவே அதே போன்று நாமும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று முடித்தார் கார்த்திக்.