எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி சாகித்ய அகாடமி அலுவலகம் முன்பாக கொங்குநாடு ஜனநாயகக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மாதொருபாகன் புத்தகத்தை 'ஒன் பார்ட் உமன்' (ONE PART WOMEN) என்ற பெயரில் அனிருத் வாசுதேவன் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதற்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாதொருபாகன் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதைக் கண்டித்து டெல்லி சாகித்ய அகாடமி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாகித்ய அகாடமியின் உறுப்பினர்களைச் சந்தித்து, இந்த புத்தகத்திற்கு விருது வழங்கினால் வரலாற்று பிழையாகிவிடும் எனக்கூறி, விருதைத் திரும்பப்பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். டெல்லி முழுவதிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தடையை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.