லண்டனில் இருந்து தேனிக்கு வந்த இன்ஜினியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்களில் இருவருக்கும் நோய்த் தொற்று பரவியது. புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பா? என்பதை அறிய புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2 வாரங்களில் தேனி மாவட்டத்திற்கு வந்த 21 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 36 வயது இன்ஜினியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் குடும்பத்தினரை தனிமைபடுத்தி, அவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட இன்ஜினியருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிய புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இவருடன் தொடர்பில் இருந்த அவரின் உறவினர்கள் இருவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து வந்தவரின் ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு வந்துள்ளது லண்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனாவா அல்லது இந்தியாவில் இருக்கும் கொரோனாவா? என்பது குறித்து ஆய்வு முடிவுக்கு பின்னரே முழுமையாக தெரியவரும் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்தார்.
மேலும் ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் சுகாதாரத் துறை, வருவாய்துறையினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.