Odisha Train Accident  PTI
இந்தியா

ஒடிசா ரயில்கள் விபத்து: 3 ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்களின் நிலை என்ன? - வெளியான புதிய தகவல்

ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில், அந்த ரயில்களின் லோக்கோ பைலட்டுகள் எனப்படும் என்ஜின் ஓட்டுநர்கள் மற்றும் ரயில்வே மேலாளர்கள் (Guards) நிலைமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சங்கீதா

ஒடிசாவின் பாலசோரில், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு மற்றும் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு பயணிகள் ரயில்களுடன், ஒரு சரக்கு ரயிலும் மோதி கவிழ்ந்து, மூன்று ரயில்களும் நேற்றிரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளாகின. நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. 803 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில், பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான இந்த 3 ரயில்களின் ஓட்டுநர்களின் நிலைமை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரண்டு பயணிகள் ரயில்களில் இருந்த என்ஜின் ஓட்டுநர்கள் மற்றும் ரயில் மேலாளர்கள் (Guard) காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வேயின் காரக்பூர் கோட்ட மூத்த வணிக மேலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், “கோரமண்டல் விரைவு ரயிலின் லோக்கோ பைலட் (என்ஜின் ஓட்டுநர்), உதவி லோக்கோ பைலட், ரயில் மேலாளர் (Guard) மற்றும் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயிலின் ரயில் மேலாளர் (Guard) ஆகியோர், வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சரக்கு ரயிலின் என்ஜின் ஓட்டுநர் மற்றும் ரயில் மேலாளர் (Guard) காயங்களின்றி உயிர்தப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.