இந்தியா

ஏடிஎம்களில் முடிவுக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுகள்?

Rasus

2000 ரூபாய் நோட்டுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளையே நிரப்பும் வகையில் வங்கி ஏடிஎம்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். அப்போது புழக்கத்தில் இருந்த பழைய 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனையடுத்து உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகளை, ஏடிஎம்களிலும் இருந்து பெறுவதற்கு ஏதுவாக அது சீரமைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து வங்கி ஏடிஎம்களில் மக்களால் 2000 ரூபாய் நோட்டுகளை எளிதாக எடுக்க முடிந்தது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளையே நிரப்பும் வகையில் வங்கி ஏடிஎம்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்கு நான்கு அடுக்குகள் உருவாக்கப்படுகின்றன. அதில் மூன்று அடுக்குகள் ரூ.500 நோட்டுகளாலும், எஞ்சிய ஒரு அடுக்கு ரூ.100, ரூ.200 நோட்டுகளாலும் நிரப்பப்படும். உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகளை இனி ஏடிஎம் புழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் அதிகமான அளிவில் அச்சிடப்பட்ட வந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. நடப்பு நிதியாண்டில் இதுவரை எந்தவொரு 2000 ரூபாய் நோட்டும் அச்சிடப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.