இந்தியா

இந்திய வரலாற்றின் கறை எமர்ஜென்சி: பிரதமர் மோடி

இந்திய வரலாற்றின் கறை எமர்ஜென்சி: பிரதமர் மோடி

webteam

இந்திய வரலாற்றின் நீக்க முடியாத கறையாக எமர்ஜென்சி அமைந்து விட்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மும்பையில் பாரதிய ஜனதா செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், எமர்ஜென்சி காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்தார். எமர்ஜென்சி தினத்தை காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி அனுசரிக்கவில்லை என்று கூறிய பிரதமர், இளைஞர்கள் எமர்ஜென்சியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அனுசரித்ததாகத் தெரிவித்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்று கூறிய பிரதமர் மோடி, எமர்ஜென்சி காலம் இந்திய வரலாற்றின் இருண்ட காலம் என்றும் நீக்க முடியாத கறை என்றும் தெரிவித்தார். 

எமர்ஜென்சியின்போது அரசியலமைப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், நீதித்துறை மிரட்டப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தவறாகப் பயன்படுத்தியதாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு மேலான ஒருவராக தன்னை இந்திராக காந்தி கருதியதாகவும் பிரதமர் விமர்சித்தார். 400 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், எமர்ஜென்சி என்ற தவறான முடிவால் தற்போது இரட்டை இலக்கத்துக்கு சரிந்து விட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு கடவுள் போன்றது என்று மோடி தெரிவித்தார்.