தேர்தல் பத்திரம் - உச்சநீதிமன்றம் புதிய தலைமுறை
இந்தியா

“நாளை மாலைக்குள் வேண்டும்...” - SBI-ஐ கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் அளிக்க எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

‘தேர்தல் பத்திரங்களின் விவரங்களை அளிக்க 4 மாதம் கால அவகாசம் வேண்டும்’ என்று எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரி இருந்தது.

அதன்மீது இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ‘கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் அளிக்க வேண்டும்’ என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் SBI கால அவகாசம் கேட்டு அளித்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

electoral bonds model image

வழக்கு விவரம் -

கடந்த 2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டம், சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான வழக்கானது கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விசாரணை தொடர்ந்துவந்த நிலையில், தேர்தல் பத்திர திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றமும் கூறியது. மேலும் இதுவரை பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவலை சமர்ப்பிக்கவும் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கு மூன்று வாரங்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது. அதை எதிர்த்த எஸ்.பி.ஐ, 4 மாதங்கள் அவகாசம் கேட்டது.

இன்றைய தீர்ப்பு...

அதன்மீது இன்று உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்ட தீர்ப்பில் ‘வங்கி செயல்படக்கூடிய நேரத்திலேயே, அதுவும் நாளைக்குள், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் யார் யாரிடத்தில் இருந்து எவ்வளவு தொகையை பெற்றன, நன்கொடையாளர் யார் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-க்குள் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தராசு ஷ்யாம் கருத்து -

இது குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நம்மிடையே தெரிவிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கி என்பது இந்திய அரசின் நிதித்துறைக்கு கீழே இயங்குவது. இதன் இயக்குநர்களை நியமிப்பதும் அரசின் நிதித்துறைதான். அதாவது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிதான் அவர்களை நியமிக்கின்றனர்.

ஆகவே பாரத ஸ்டேட் பாங்க் தானாக முன்வந்து இந்த கால அவகாசத்தினை கேட்டிருக்காது. நிச்சயம் இது பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம்தான். அது தெளிவாக தெரிகிறது.

‘இரண்டு தொகுப்பாக உள்ள விவரங்களை சமன் செய்ய எங்களுக்கு கால அவகாசம் தேவை’ என்பது வங்கியின் வாதம். ஆனால், 22,217 தேர்தல் பத்திரம்தான் பரிவர்த்தனை ஆகியுள்ளது. ஆகவே இதுதான் பணமாக மாறியிருக்கும். இதனை தருவதற்கு எதற்கு இத்தனை கால அவகாசம் தேவைப்படுகிறது?

இதையெல்லாம் கருத்தில்கொண்டே நாளைக்குள் கொடுத்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி அது வெளிவந்தால், பாரதிய ஜனதாவின் கஜானா ரகசியம் வெளிவந்துவிடும். மேலும் பொருளாதார குற்றங்களுக்காக இந்த நாட்டில் இருந்து தப்பித்து சென்றவர்களுக்கு கொடுத்த தேர்தல் பத்திர விவகாரங்களும் வெளியே தெரிவிந்துவிடும். அவை தெரிந்துவிட கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் இப்படி கால அவகாசம் கேட்கின்றனர்” என்றார்.