உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ புதிய தலைமுறை
இந்தியா

2019 - 24 | 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை... 10 நாளில் 3,346... முழு விவரங்களையும் அளித்த SBI!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி, இன்று (மார்ச் 13) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Prakash J

தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க மேலும் நான்கு மாத காலம் அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.பி.ஐயின் இந்த கால அவகாச நீட்டிப்பு கோரிக்கையானது, மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு விவரங்களை வெளியிடும் வகையில் இருந்தது.

இந்த நிலையில், இம்மனு மீது கடந்த மார்ச் 11ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “வங்கி செயல்படக்கூடிய நேரத்திலேயே, அதுவும் மார்ச் 12க்குள் (நேற்று), கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் யார்யாரிடத்தில் இருந்து எவ்வளவு தொகையை பெற்றன, நன்கொடையாளர் யார் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15க்குள் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டதுடன் எஸ்.பி.ஐ-யின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேற்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. அளித்தது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 13) தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 11 வரை, அதாவது அந்த 10 நாட்களில் மட்டும் 3,346 தேர்தல் பத்திரங்கள் விற்பனைச் செய்யப்பட்டதாகவும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களையும் வாங்கிய தேதி, வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல்: முதல் 5 போட்டிகள்.. மும்பை அணியிலிருந்து விலகும் 3 முக்கிய வீரர்கள்.. இதுதான் காரணமா?