இந்தியா

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - ராகுல் காந்தி கர்நாடகாவில் வாக்களித்தார்!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - ராகுல் காந்தி கர்நாடகாவில் வாக்களித்தார்!

webteam

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கியது; ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே கர்நாடகாவிலும், சசிதரூர் கேரளாவிலும் வாக்களித்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மாநில காங்கிரஸ் அலுவலகம் உட்பட நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுனா கார்கே கர்நாடகாவிலும், சசிதரூர் கேரளாவிலும் தங்களது வாக்கினை செலுத்தினர். இந்த தேர்தலில் மாநில தலைவர்கள், செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியுள்ள நபர்களாக இருக்கிறார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைகிறது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதலாவதாக தனது வாக்கினை செலுத்தினார். கர்நாடகாவில் தனது வாக்கினை செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களின் ஒரு பகுதி தான் இந்த தேர்தல். ஒன்றாக இணைந்து கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்பது தான் நோக்கம் என்றார். கேரளாவில் பேட்டியளித்த சசிதரூர் கூறுகையில், தேர்தலில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோன்று, 'இந்திய ஒற்றுமை' நடை பயணத்தில் கலந்து கொண்டுள்ள ராகுல் காந்தி கர்நாடகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்களது வாக்கினை செலுத்த இருக்கிறார்கள். இன்றைய தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மாநிலங்களில் உள்ள வாக்கு பெட்டிகள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் என்பது அறிவிக்கப்பட இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: 22 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம் என்ன தெரியுமா?