கார்கே, ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்தி, பிரதமர் மோடி pt web
இந்தியா

10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்: என்ன நடக்கிறது ஜம்மு காஷ்மீரில்? அரசியல் சூழல் கூட்டணி கணக்குகள் என்ன?

பத்து ஆண்டுகளுக்குப்பின் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது ஜம்மு, காஷ்மீர். இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்காக ஆயத்தமாகிறது அந்த மாநிலம்.

PT WEB

ஜம்மு காஷ்மீர் தேர்தல்

பத்து ஆண்டுகளுக்குப்பின் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது ஜம்மு, காஷ்மீர். இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்காக ஆயத்தமாகிறது அந்த மாநிலம். இந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது? அங்குள்ள அரசியல் சூழல், கூட்டணிகள் குறித்து பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. இதன்பிறகு இங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்துவருகிறது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்துக்கு 10 ஆண்டுகளுக்குப்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.

கூட்டணியில் காங்கிரஸ்

தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேசிய மாநாட்டுக்கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய பாந்தர்ஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் தோழமை ரீதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தேசியமாநாட்டுக்கட் சி துணைத்தலைவர் ஒமர் அப்துல்லா Ganderbal தொகுதியில் களம் காண உள்ளார்

இத்தேர்தலை பாரதிய ஜனதா கட்சி தனித்து சந்திக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் ஜம்மு, காஷ்மீரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். தேர்தலையொட்டி முதலில் 44 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருந்தது. பிற கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் சீட் வழங்கப்பட்டதால் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து 16 வேட்பாளர்களாக குறைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2 ஆவது கட்டத் தேர்தலுக்கு 10 பேர், 3 ஆம் கட்டத்தேர்தலுக்கு 19 பேர் கொண்ட பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டது.

முக்கியமான தேர்தல்

2014 ல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியும் மக்கள் ஜனநாயகக்கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. மக்கள் ஜனநாயகக்கட்சி தலைவர் முஃப்தி முகமது சயது, முதலமைச்சரானார். அவர் மறைவைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அவரது மகள் மெகபூபா முஃப்தி ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். 2018 ஆம் ஆண்டு, ஆதரவை பாஜக விலகிக் கொண்டதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

2019 ல் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு குடியரசுத்தலைவர் ஆட்சியே தொடர்கிறது. வழக்கமாக பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கும் நிலையில், தற்போது ஜம்முவிலும் தீவிரவாதிகள் ஊடுருவலும், தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இது ஜம்மு காஷ்மீர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. இதேபோல. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்று நோக்கப்படுகிறது.