இந்தியா

"காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல்"- பிரவீன் சக்கரவர்த்தி பிரத்யேக பேட்டி

"காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல்"- பிரவீன் சக்கரவர்த்தி பிரத்யேக பேட்டி

ச. முத்துகிருஷ்ணன்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என அக்கட்சியின் தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி சந்தித்த நிலையில், மோசமான தேர்தல் தோல்வியால், தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். சமீபத்தில் 5 மாநில தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்த நிலையில், கட்சிக்கு முழுநேர தலைவராக ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என அக்கட்சியின் தரவுப் பகுப்பாய்வுத் துறையின் (Data Analytics) தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் “காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் முறையில் 2.6 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார். உறுப்பினர் சேர்க்கை நடத்தும் காங்கிரஸ் செயலி, இந்தியாவிலே 2வது அதிக பயன்பாட்டில் உள்ள செயலியாக உருவாகி உள்ளது. உண்மையான முறையில் சரிபார்க்கப்பட்டவர்கள் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

கட்சியின் அகில இந்திய உறுப்பினர்கள் சேர்க்கை இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. உறுப்பினர் சேர்க்கை முடிவடையும் நிலையில், விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த சில மாதங்களில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தேடுக்கப்படுவார்” என்று கூறினார்.