தேர்தல் ஆணையம் நோட்டீஸ் x page
இந்தியா

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி.. இன்று அறிவிப்பு வெளியாகிறது!

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சரத் பவார் கட்சியில் இருந்து அஜித் பவார் கட்சியும் இணைந்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

maharashtra

ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் 2025 ஜனவரியில் முடிவடைகிறது. ஆக, இம்மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதுபோல் ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக நயாப் சிங் சயானி உள்ளார். அவர்களின் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆக, இம்மாநிலத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: ஆளும்கட்சி பேரணி.. 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது. இதனை தொடந்து கடந்த 14ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவை இந்திய தேர்தல் அதிகாரிகள் நேரில் சந்தித்து பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 4 மாநில சட்டசபை (மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர்) தேர்தல் தேதி அட்டவணையை இன்று (ஆகஸ்ட் 16) இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது.

jammu - kashmir

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்டநாட்களாக நிலுவையில் இருந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் விசாரணை நடத்தப்பட்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜம்மு - காஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “அலோபதியால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பு” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்!