ஷோபா கரண்ட்லஜே ட்விட்டர்
இந்தியா

தமிழர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: மத்திய இணையமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

தமிழர்களை அவதூறாகப் பேசிய மத்திய இணையமைச்சர்!

கர்நாடகாவின் சித்தண்ணகல்லி பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர் அனுமன் பாடல்களைச் சத்தமாக ஒலிபரப்பிய விவகாரத்தில் அவருக்கும் அங்கு வந்த சில இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கடைக்காரர் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த விவகாரம் இந்து - முஸ்லிம் சம்பந்தப்பட்டதாகவும் அங்குள்ள கட்சிகளால் திசை திருப்பப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மாநில பாஜக சார்பில் நேற்று (மார்ச் 19) போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில எம்.பி. தேஜஸ்வி சூர்யா, மத்திய இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஷோபா கரண்ட்லஜே, ’’தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான ஷோபா கரண்ட்லஜே, இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: “வேண்டுமென்றே போலியான புகார்” - பாக். வெற்றியை கொண்டாடியதாக கைதான 17 ம.பி இஸ்லாமியர்கள் விடுதலை!

மத்திய இணையமைச்சருக்கு எதிராகக் குவிந்த கண்டனங்கள்!

தேர்தல் நேரத்தில் மக்களிடம் வெறுப்பை பரப்பிவிட்டு, பிரிவினைக்கு வித்திடுவதாக பலரும் விமர்சித்தனர். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். அதேநேரத்தில், திமுக தரப்பில் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்பு கேட்ட மத்திய இணையமைச்சர்

இதற்கிடையே, தமிழர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஷோபா கரண்ட்லஜே பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். மேலும் தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில்,”கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது . தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் காயமடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளன. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலுக்கான தேதிகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அந்தத் தேர்தல் நடத்தை விதிகளில், மதரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது எனவும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அண்ணன் மகனுக்கு சீட்: பாஜக மீது அதிருப்தி.. ராஜினாமா செய்த அமைச்சர்.. யார் இந்த பசுபதி குமார் பராஸ்?