bjp, election commission x page
இந்தியா

ஜார்க்கண்ட் தேர்தல் | இஸ்லாமியர்களை மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பாஜவுக்கு EC நோட்டீஸ்!

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட விளம்பரம் இணையத்தில் வைரலான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Prakash J

ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட 5 ஆண்டு பதவிக்காலம் 2025 ஜனவரி 5ல் முடிவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடிவுசெய்த தேர்தல் ஆணையம், அதற்கான தேதியை அறிவித்தது. அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட விளம்பரம் இணையத்தில் வைரலான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தக் கட்சி, இஸ்லாமியர்கள் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை தொடர்புபடுத்தி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதில், ’ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ஓட்டுகளை மாற்றுவதல் பெரிய தவறு நடந்துவிடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும். கடந்த காலமான 2019இல் செய்த தவற்றை இப்போது செய்யாதீர்கள். இந்த முறை சரியாக வாக்களித்து பாஜகவை தேர்வு செய்யுங்கள்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. அடிப்படை ஆதாரமின்றி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக வீடியோ வெளியிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் அந்த வீடியோவை நீக்க பாஜகவுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க: எலான் மஸ்க் To சுசி வைல்ஸ்| ட்ரம்பின் அறிவித்த முக்கிய ஆட்சியாளர்கள்..இதுவரை யார் யார்..முழு விவரம்!