இந்தியா

“உங்கள் தமிழ் கடிதம் புரியவில்லை” - ஷாக் கொடுத்த இந்திய தேர்தல் ஆணையம்

“உங்கள் தமிழ் கடிதம் புரியவில்லை” - ஷாக் கொடுத்த இந்திய தேர்தல் ஆணையம்

Rasus

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காதது தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதியிருக்கிறார். தேர்தல் முடிவுகளே வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் தற்போதுதான் அதற்கு பதில் அளித்திருக்கிறது. அதில் கடிதம் தமிழில் இருப்பதால் புரியவில்லை என்றும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் புகாரை அனுப்புமாறு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு 5 நாட்கள் முன்னதாக அதாவது ஏப்ரல் 13-ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதது தொடர்பான புகார் கடிதமே அது. அந்தக் கடிதத்தில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள தேவபாண்டலம் அரசு பள்ளியில் ரிசர்வ் பணிக்காக ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் ஊழியர்கள் தங்க வைப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து வசதி எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் சரவணன் தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படியும் தனது புகார் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக சரவணன் எழுதிய கடிதத்திற்கு, தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பின்பு தற்போதுதான் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வந்திருக்கிறது. அதுவும், உங்கள் மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம். ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் உங்களது கடிதத்தை அனுப்பும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பதிலை எதிர்பார்த்த சரவணன் அதிர்ந்து போனார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் சரவணன் புகார் அனுப்பிய நிலையில் அங்கிருந்து தற்போது வரை அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லையாம்.

இதனிடையே மீண்டும் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சரவணன் எழுதிய கடிதத்தில், “ நான் தமிழ் வழியில் கல்வி பயின்றவன். அதனால் என்னுடை புகார் மனுவை ஆங்கிலத்திற்கோ அல்லது ஹிந்திக்கோ மொழிமாற்றம் செய்யத் தெரியாது. அதனால் ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்த நபர்களை மொழிமாற்றம் செய்ய தமிழகத் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு நீங்களே ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால் இவ்விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்வேன். நீதிமன்றமே உங்களின் மொழிப் பிரச்னையை தீர்க்க முடிவு செய்யும்” என மறுபடியும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக சரவணன் கூறும்போது, “தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் என் புகாரை அனுப்பியிருந்தேன். ஆனால் இன்றுவரை பதில் இல்லை. இந்திய தேர்தல் ஆணையமோ மொழி புரியவில்லை என்கிறது. தேர்தல் முடிவுகளே வந்துள்ள நிலையில் என் புகாருக்கு இன்றுவரை பதில் இல்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதையே இது காட்டுகிறது” எனக் கூறினார்.