ராகுல், மோடி ட்விட்டர்
இந்தியா

வெறுப்புப் பேச்சு | மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஏப்ரல் 26) 2வது கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் மாறிமாறி எதிர்க்கட்சிகளைக் குற்றஞ்சாட்டி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, ‘மதரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது’ என தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், அதையும் தாண்டி வேட்பாளர்கள் பேசிவருவது தொடர்பாகவும் செய்கையில் ஈடுபடுவது தொடர்பாகவும் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் “ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் குறித்தும் மாங்கல்யம் குறித்தும் அவதூறாக பரப்புரையாற்றிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’” என காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல, “நாட்டில் தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் மாநில அடிப்படையில் வடக்கு மற்றும் தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார்” என பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இதையும் படிக்க: ராஜஸ்தான் | “I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும்” - பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்

இந்தப் புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவதூறு பேச்சுகளுக்கு தனிநபர்களுக்கே நேரடியாக நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் நிலையில், இந்த முறை முதல்முறையாக, தேர்தல் ஆணையம், அவர்கள் தொடர்புடைய கட்சிக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் கோரியிருக்கிறது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77வது பிரிவை மேற்கோள் காட்டி, கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை, குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் முதன்மைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரசார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர் | அமெரிக்காவில் பல்கலை மாணவர்கள் போராட்டம்.. கைதுசெய்யும் காவல்துறை! #Viralvideo