இந்தியா

தேர்தல் ஆணையம் அதிரடி! பதவி விலகுகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர்? முழு விபரம் இதோ

தேர்தல் ஆணையம் அதிரடி! பதவி விலகுகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர்? முழு விபரம் இதோ

webteam

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அகில இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டணியின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சுரங்கம் ஒன்றை முதல்வர் ஹேமந்த் சோரன் தனது குடும்ப நிறுவனத்திற்கு முறைகேடாக அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால், ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

ஹேமந்த் சோரன் மீண்டும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பையஸ் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.