இந்தியா

“வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி தவறான தகவல்”- தேர்தல் ஆணையம் போலிசில் புகார்

“வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி தவறான தகவல்”- தேர்தல் ஆணையம் போலிசில் புகார்

webteam

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமென தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் போலிஸில் புகார் அளித்துள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது எனவும் இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் புகார் தெரிவித்தார்.

பாஜகவை தாண்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்வதற்காக தன்னை அணுகின என்றும், ஈவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து சட்டரீதியாக அணுகுவது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமென தவறான தகவல் பரப்பியவர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கும் வகையில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.