eci x page
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 3 கட்ட தேர்தல்.. ஹரியானாவில் அக்.1-ல் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய 2 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Prakash J

மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடனும், ஹரியானா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 3-ஆம் தேதியுடனும், ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் 2025 ஜனவரியுடனும் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் இன்று (ஆக.16) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய 2 மாநிலங்களுக்கு மட்டுமே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் 74 பொதுத் தொகுதிகளாகவும், 9 எஸ்டி தொகுதிகளாகவும் 7 எஸ்சி தொகுதிகளாகவும் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் சுமார் 87.09 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அதில் ஆண்கள் சுமார் 44.46 லட்சமும், பெண்கள் சுமார் 42.62 லட்சமும் என்ற எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதில், சுமார் 3.71 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 11,838 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் நகர்ப்புறத்தில் 2,332 வாக்குச்சாவடி மையங்களும், கிராமப்புறங்களில் 9,506 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்படுகின்றது. ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு சராசரியாக 735 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இதையும் படிக்க: “அலோபதியால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பு” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்!

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், இறுதிக்கட்டமாக் அக்டோபர் 1ஆம் தேதியும் தேர்தல் என மூன்றுகட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4 நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் வாக்குப்பதிவு எப்போது?

மூன்றுகட்ட வாக்குப்பதிவு

முதற்கட்டம் - செப்டம்பர் 18

இரண்டாம்கட்ட்டம் - செப்டம்பர் 25

மூன்றாவது கட்டம் - அக்டோபர் 1

ஜம்மு - காஷ்மீர்

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

ஹரியானா மாநிலத்திற்கு 90 சட்டமன்றத் தேர்தல் தொகுதிகள் உள்ளன. இதில் பொதுத் தொகுதிகள் 73. எஸ்சி தொகுதிகள் 17. ஹரியானா மாநிலத்தில் 20,629 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 7.132 நகர்ப்புற பகுதிகளிலும் 13,497 கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட உள்ளன. ஹரியானா மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.01 கோடி. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 0.95 கோடி. முதல்முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 4.52 லட்சம். 20-29 வயது வரையிலான இளம் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 40.95 லட்சம்.

ஹரியானா

ஹரியானா ஒரேகட்டமாக வாக்குப்பதிவு

வேட்பு மனுத் தாக்கல் - செப்டம்பர் 12

வேட்பு மனு பரிசீலனை - செப்டம்பர் 13

வேட்பு மனு திரும்ப பெறுதல் - செப்டம்பர் 16

வாக்குப்பதிவு - அக்டோபர் 1

வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 4

இதையும் படிக்க: இளம் வயதில் திருமண வாழ்க்கை!! பாகிஸ்தானில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்.. காரணம் இதுதான்!