டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்ட திருத்தம் கொண்டு வரும் தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் டெல்லியில் நேற்று கூட்டியது. இதில், 7 தேசிய கட்சிகள் மற்றும் 49 மாநில கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கூறியதாவது, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பயன்படுத்திய ஓட்டு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதை நிரூபித்து காட்டுங்கள். தேர்தல் ஆணையம் யாருக்கும் சாதகமாக செயல்படாது. அனைத்து கட்சிகளுக்கும் ஆணையம் பொதுவானது என்று அவர் கூறினார்.
கூட்டத்தில், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும், தேர்தலை ரத்து செய்யவும் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் தேவையான சட்டத் திருத்தம் செய்ய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.