இந்தியா

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளம்

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளம்

JustinDurai

5 மாநில தேர்தல் தேதியை அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உச்சநீதிமன்ற உத்தரவு ஒன்றை மேற்கோள் காட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, குற்றப் பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தால், அதற்கான காரணம் மற்றும் வழக்கு விவரங்களை 48 மணி நேரத்திற்குள் இணையதளம் மற்றும் ஊடகங்களில் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் வெற்றி வாய்ப்புடையவர் என வெறுமனே குறிப்பிடாமல் அவர்களது கடந்தகால சாதனைகள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை கட்சிகள் வெளியிட வேண்டும். இல்லையெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததாக கருதப்படும்.

இவைத் தவிர, குற்றப் பின்னணி உடைய வேட்பாளரும் பரப்புரையின்போது 3 முறை தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் தம்மீதான வழக்குகளை தெரிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், 5 மாநில தேர்தலில் குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.