மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் 80 வயது முதியவருக்கு ரூ.80 கோடி மின் கட்டணம் வந்ததையடுத்து அதிர்ச்சியில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்டிரா மாநிலம் நலசோபாரா என்ற ஊரைச் சேர்ந்தவர் கன்பத் நாயக். அவருக்கு வயது 80. அவருக்கு மகாராஷ்ட்டிரா மின் பகிர்மானக் கழக்ததில் இருந்து மின் கட்டணம் வந்தது. அதனைக் கண்ட முதியவர் கன்பத் நாயக் பேரதிர்ச்சியில் உறைந்தே போனார். ஆம் அவருக்கு ரூ.80 கோடி என மின் கட்டணம் வந்தது. கன்பத் நாயக்குக்கு ஏற்கெனவே இதய நோய் உள்ளது. இந்தக் கட்டணத்தை கண்ட அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது.
இதனால் மயங்கி கீழே விழுந்த அவரை பேரப் பிள்ளைகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இது குறித்து பேசிய கன்பத்தின் பேரன் நிகில் " முதலில் இந்தக் மின் கட்டணத்தை பார்த்தபோது இது ஒட்டுமொத்த மாவட்டத்துக்கானது என நினைத்தோம். பின்புதான் தெரிந்தது இது எங்களுடைய கட்டணம் என்று. பொது முடக்க காலத்தில் மின்வாரியம் அரியருடன் மின் கட்டணத்தை வசூலிக்கிறது. இதனால் நாங்களும் பயந்துவிட்டோம்" என்றார்.
இது குறித்து விளக்கமளித்த மகாராஷ்ட்டிரா மின் வாரிய அதிகாரி சுரேந்திர மோர்னே "இது கிளரிக்கல் (நிர்வாகம்) தவறால் நிகழ்ந்துவிட்டது. 6 எண்கள் குறிப்பிட வேண்டிய இடத்தில் 9 எண்கள் குறிப்பிடப்பட்டுவிட்டது. இப்போது அந்த தவறு திருத்தப்பட்டு கன்பத் நாயக் வீட்டுக்கு திருத்தப்பட்ட மின் கட்டணம் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்களுக்கும் மகிழ்ச்சியே" என்றார்.