ஹசாரிராம் பிஷ்னோய், சாவாலி தேவி எக்ஸ் தளம்
இந்தியா

’போய் பிச்சை எடுங்க’ - விரட்டிய பிள்ளைகளால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. ராஜஸ்தானில் கொடூரம்!

Prakash J

ராஜஸ்தான் மாநிலம் நாகூரைச் சேர்ந்தவர் ஹசாரிராம் பிஷ்னோய் (70). இவரது மனைவி சாவாலி தேவி (68). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்பட 4 குழந்தைகள். இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் வீட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் பெயரில் இருந்த அனைத்துச் சொத்துக்களையும் மகன் மற்றும் மகள்கள் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகவும், அதன்பிறகு அவர்களுக்கு சாப்பாடு அளிக்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து யாரிடம் சொல்லக்கூடாது எனவும் போலீசில் புகார் அளிக்கக்கூடாது எனவும் அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணையில், ”அவர்கள் இறப்பதற்கு முன்பாக, தங்கள் மகன் மற்றும் மகள்கள் செய்த கொடுஞ்செயல்களைக் குறிப்புகளாக எழுதி, வீட்டுச் சுவரில் ஒட்டிவத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதில் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து மருமகள்களும் தாக்கியதாக எழுதப்பட்டுள்ளது” எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: PAKvENG| 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்... முதல்முறையாக மோசமான சாதனையைப் படைத்த பாகிஸ்தான்!

மேலும் அவர்கள், “இதில் அவர்களுடைய ஒரு மகன், அந்த தாயாரிடம் கிண்ணம் ஒன்றைக் கொடுத்து, ‘பிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்’ என சொல்லி விரட்டியதாக அதில் எழுதப்பட்டுள்ளது. மேலும் சொத்து குறித்த விவரங்களை யார்யார் வாங்கியது என்கிற விவரங்களையும், தங்களைத் தாக்கியவர்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம். அதை மறைப்பதற்காக அவர்களுடைய குழந்தைகளே, இதை தற்கொலையாக மாற்றியிருக்கலாம். ஆகவே இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆக, இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இதையும் படிக்க: Noel Tata| டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல் டாடா?