இந்தியா

வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரர் - வாசல் படியில் தங்கியிருக்கும் உரிமையாளர்

வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரர் - வாசல் படியில் தங்கியிருக்கும் உரிமையாளர்

ஜா. ஜாக்சன் சிங்

வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்ததால் அந்த வீட்டின் சொந்தக்காரர்களான வயதான தம்பதியர் வாசல் படியில் தங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் சுனில் குமார் - ராக்கி குப்தா தம்பதியர். இவர்களுக்கு நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. சுனில் குமார் மும்பையில் பணிபுரிந்ததால் அந்த வீட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரீத்தி என்பவருக்கு 11 மாதக்கால லீஸ்-க்கு விட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சுனில் குமார் பணியில் இருந்து ஓய்வுபெற்றதால், தனது மனைவி ராக்கி குப்தாவுடன் நொய்டா திரும்பினார். ஆனால், வீட்டை ஒத்திக்கு விட்டிருப்பதால் தங்கள் உறவினர்கள் வீட்டில் தம்பதியர் தங்கியிருந்தனர். 11 மாதக்கால ஒத்தி, ஜூலையுடன் (இந்த மாதம்) நிறைவடைவதால் கடந்த ஏப்ரல் மாதமே ப்ரீத்தியிடம் வீட்டை காலி செய்வது தொடர்பாக சுனில்குமார் பேசிவிட்டார்.

இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி ப்ரீத்தியிடம் வீட்டை காலி செய்யுமாறு சுனில்குமார் தொலைபேசியில் கூறினார். அதற்கு ப்ரீத்தியும் சம்மதம் தெரிவித்தார். இதனால் உறவினர் வீட்டில் இருந்து தங்களை உடைமைகளை எடுத்துக் கொண்டு சுனில்குமாரும், ராக்கி குப்தாவும் அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

ஆனால் வீடு காலி செய்யப்படாததை கண்ட அவர்கள், இதுகுறித்து ப்ரீத்தியிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் வீட்டை காலி செய்ய முடியாது என்றும், அது தன்னுடைய வீடு எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியர், என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்துள்ளனர். பின்னர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீஸாரோ, 'இது சிவில் வழக்கு; நீங்கள் நீதிமன்றத்தில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' எனக் கூறிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, எங்கு செல்வதென்று தெரியாமல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் வீட்டு வாசற்படியில் வயதான தம்பதியர் தங்கியுள்ளனர்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்று, அவர்களின் நிலைமையை நேரில் கண்டு செய்தியாக வெளியிட்டுள்ளனர். இதனால் நொய்டா முழுவதும் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து, வீட்டை பூட்டிவிட்டு ப்ரீத்தி வெளியே சென்றுவிட்டார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சுனில்குமார் கூறுகையில், "எனது வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக பணம் சேமித்து வாங்கிய வீடு இது. ஆனால், வீட்டில் லீஸ்க்கு இருந்துவிட்டு இன்று அந்த வீட்டையே ப்ரீத்தி சொந்தம் கொண்டாடுகிறார். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடிவிட்டோம். யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. எங்கள் வீட்டை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள்" என அவர் கண்ணீர் மல்க கூறினார்.