இந்தியா

ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!

ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து மகாராஷ்டிர அரசியல் களத்தில் இன்று நிகழ்ந்த மிக முக்கியமான டாப் 5 சம்பவங்கள் இதோ!

1. ஏக்நாத் ஷிண்டேதான் முதலமைச்சர்; நானில்லை - பட்னாவிஸ்

பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸே அறிவித்தார். இன்று இரவு 7.30க்கு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அவர் அறிவித்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்றும் ஷிண்டே அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என்றும் ஆனால் பட்னாவிஸ் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

2. “சாவர்க்கரையும் இந்துத்துவாவையும் அவமதித்தார் உத்தவ் தாக்கரே”

2019இல் மகாராஷ்டிர மக்கள் பாரதிய ஜனதாவின் ஆட்சியையே விரும்பினர் என்றும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தல் முடிவுக்கு பின் மீறிவிட்டார் உத்தவ் தாக்கரே என்றும் பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் பால் தாக்கரேவின் கொள்கைகளுக்கு எதிரானதாக, சாவர்க்கரையும் இந்துத்துவத்தையும் அவமதிப்பது போல இருந்தது சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

3. “சொந்தமாக உழைத்து” மீண்டும் அதிகாரத்திற்கு வருவோம் - சஞ்சய் ராவத் சூளுரை

“முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தபோது அனைவரும் உணர்ச்சிவசப்பட்டோம். உத்தவ் தாக்கரே மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம். அனைத்து மதம், ஜாதி மக்கள் உத்தவ் தாக்கரேவை ஆதரிக்கின்றனர். சோனியா காந்தியும், சரத் பவாரும் உத்தவ் தாக்கரே மீது நம்பிக்கை வைத்தனர். சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை, அதிகாரம் தான் சிவசேனாவிற்காக பிறந்துள்ளது. இது தான் பால சாஹேப் தாக்கரேவின் மந்திரிச்சொல். ‘சொந்தமாக உழைத்து’ நாங்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவோம்” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சூளுரைத்தார்.

4. நாங்கள் யார் முதுகிலும் குத்தவில்லை - அதிருப்தி எம்.எல்.ஏ

“உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த பிறகு கொண்டாட்டம் எதுவும் இல்லை; உத்தவ் தாக்கரே ஒரு மரியாதைக்குரிய தலைவர். பாஜகவுடன் இதுவரை எந்த இலாகாவும் விவாதிக்கப்படவில்லை. சிவசேனாவின் அடிப்படை சித்தாந்தத்தை காப்பாற்றுவதே எங்களது முக்கிய நோக்கம். ஏக்நாத் ஷிண்டே மும்பை சென்றுள்ளார். எந்த முடிவு எடுத்தாலும் அது மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே இருக்கும். நாங்கள் யாரையும் முதுகில் குத்தவில்லை. மக்கள் மத்தியில் அதிருப்தியை பரப்புவதற்காகவே சஞ்சய் ராவத்தின் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுகிறார்” என்று சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கர் கூறினார்.

5. உத்தவ் இல்லத்தில் காங். தலைவர்கள் திடீர் முகாம்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு காங்கிரஸ் தலைவர்கள் திடீர் வருகை புரிந்தனர். பிருத்விராஜ் சவான், யஷோமதி தாக்கூர், நானா படோல், பாலாசாகேப் தோரட் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோர் தாக்கரேவை சந்தித்து பேசினர். சிவசேனாவைச் சேர்ந்த சுபாஷ் தேசாய், சந்திரகாந்த் கைரே ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர். அடுத்த கட்ட முக்கிய நகர்வுகள் குறித்து விவாதம் நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.