இந்தியா

முட்டையை உடைக்க சுத்தியல் - குளிரின் கொடுமையை உணர்த்தும் வீடியோ

முட்டையை உடைக்க சுத்தியல் - குளிரின் கொடுமையை உணர்த்தும் வீடியோ

webteam

சியாச்சினில் நிலவும் குளிரின் கொடுமையை உணர்த்தும் விதமாக ராணுவ வீரர்கள் வெளியிட்ட வீடியோவை பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்

சியாச்சின் இமய மலையின் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. உலகின் மிக குளிர்ச்சியான பகுதிகளில் சியாச்சினும் ஒன்று. அருகில் பாகிஸ்தான் இருப்பதால் நமது ராணுவ படையினர் பலர் இங்கு தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பனி சரிவுகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நிகழும். எதிரிகளுடன் போராடுவதை விடவும் அங்கு நிலவும் குளிரோடு போராடுவதே மிக கடினமான காரியம்.

இந்நிலையில் இந்த கடும் குளிரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் நமது ராணுவ வீரர்கள் படும் துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக  டேராடூனில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மூன்று ராணுவ வீரர்கள் உள்ளனர். அதில் ஒரு ராணுவ வீரர் ஜூஸ் பாக்கெட்டை கத்தியால் கிழிக்கிறார், ஆனால் பாக்கெட்டில் தண்ணீர் போல் இருக்க வேண்டிய ஜூஸ், கடும் குளிரால் செங்கல் போல் மாறியுள்ளது.

இன்னொரு வீரர் ஜூஸை சுத்தியலால் உடைக்க முயல்கிறார். ஆனால் அப்போதும் அது உடையவில்லை. அதன் பின்னர் அங்கு இருக்கும் இரண்டு முட்டைகளை ஒன்றோடு ஒன்று மோத வைத்து உடைக்க முயல்கிறார் அந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஒரு முட்டையை மட்டும் எடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த டேபிளில் ஓங்கி அடிக்கிறார், அப்போதும் அந்த முட்டையும் உடையவில்லை. இது மட்டுமல்ல அவர்கள் வைத்திருக்கும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, உருளை கிழங்கு என அனைத்தையும் உடைக்க முயல்கிறார்கள். 

ராணுவ வீரர்கள் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து  பணியாற்றும் ராணுவ வீரர்களை பலரும் பாராட்டி, நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்