சந்திரபாபு, ஜெகன் மோகன் எக்ஸ் தளம்
இந்தியா

தினம் 993 முட்டை பஃப்ஸ் | CM ஆபீஸில் ரூ.3.62 கோடி ஊழல்.. சிக்கலில் ஜெகன் மோகன்? அதிரும் ஆந்திரா!

Prakash J

18வது நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் மோகன் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், ஜெகன் ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அடுத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தது. அப்போது, முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது.

இது, தினசரி 993 முட்டை பஃப்ஸ்கள் சாப்பிடுவதற்கு சமம் எனவும், ஐந்தாண்டு காலத்தில், இதன் எண்ணிக்கை 18 லட்சம் முட்டை பஃப்ஸ்கள் எனவும் கூறப்படுகிறது. இதன்மூலம், “பப்ஸ்களுக்கு மட்டுமே ஐந்தாண்டுகளில் மூன்றே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றால், மற்ற விவகாரங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அரசு பணத்தை எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இதைவைத்தே கண்டுபிடிக்க முடியும்” என தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும் 'முட்டை பப்ஸ் ஜெகன்மோகன் ரெட்டி' என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது.

இதையும் படிக்க: ஆரம்பித்த ஒரேநாளில் 10 மில்லியன் சந்தாதாரர்கள்.. உலக சாதனை படைத்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்!

இதுதொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெளியிட்டிருந்த பதிவில், “உண்மைகளை சரிபார்க்காமல் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பவது ஏமாற்றமளிக்கிறது. எந்த உறுதிப்படுத்தலும் அல்லது ஆதாரமும் இல்லாமல் ஒருவர் எப்படி இத்தகைய அப்பட்டமான தவறான தகவல்களை ட்வீட் செய்ய முடியும்” எனக் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்குப் பதிலளித்த தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டிருந்த பதிவில், “மக்கள் பணத்தை ஜெகன் மோகன் அனைத்து வகையிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இது, உங்கள் தவறான செயல்களின் ஆரம்பம்” எனப் பதிலளித்துள்ளது.

இதையடுத்து, ஆந்திர அரசியலில் முட்டை பப்ஸ் ஊழல் வேகமெடுத்துள்ளது. முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா மலையில் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆடம்பரமான ரிசார்ட்டைக் கட்டியதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

அதற்கு பிறகு, ஜெகனின் குடும்பத்தினருக்கு அதிகளவு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது, அவர்கள் விரைவாக பயணம் செய்வதற்கு சிறப்பு விமானங்கள், விடுமுறைகளை கொண்டாடுவதற்கு ஹெலிகாப்டர்கள் என அரசு பணத்தை பயன்படுத்தியதாக ஜெகன் மீது ஆளும் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: World Pickleball League|சென்னை அணியின் உரிமையை பெற்ற நடிகை சமந்தா! Sports-ல் குதிக்க காரணம் என்ன?