கர்நாடகா முகநூல்
இந்தியா

கர்நாடகா|"அமைச்சருக்கு கன்னடமே பேச தெரியல"-காணொளி உரையாடலில் தெரிவித்த மாணவர்..அமைச்சர் செய்த செயல்!

கர்நாடகாவில் “ அமைச்சருக்கு கன்னடமே ஒழுங்காக பேச தெரியவில்லை” என்று தெரிவித்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

காணொளி காட்சியின் வழியாக கருத்தரங்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது, மாணவர் ஒருவர் அமைச்சருக்கு ஒழுங்காக கன்னடம் பேச தெரியவில்லை என்று கூறியநிலையில், அம்மாணவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில், ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் 25,000 மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கும் திட்டத்திட்டமானது புதன்கிழமை காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் மாநில கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

அப்போது, தீடீரென ஒரு மாணவர், “ அமைச்சருக்கு கன்னடமே ஒழுங்காக பேச தெரியவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், ஆவேசமடைந்த அமைச்சர் மது பங்காரப்பா, ”இப்போது நான் உருதுவிலா பேசுகிறேனா? .எனக்கு கன்னடம் தெரியாது என்று யார் சொன்னாலும், அதை பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள். இது மிகவும் முட்டாள்தனமானது. அங்கிருக்கும் ஆசிரியர்கள் யார்? இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த மாணவனை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று மூத்த கல்வி அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் பதில் தர மறுத்துவிட்டனர்.

மேலும், இதனை தெரிவித்தது ஒரு மாணவனா அல்லது அதிகாரியா என்பது ஆடியோவில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை என்று சிலர் கூறி இருக்கின்றனர்.

இது குறித்து பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டூல் யட்னல் கூறுகையில், “கல்வி அமைச்சருக்கு கன்னடம் தெரியாது என்பது மாநிலத்துக்குத் தெரியும்... அமைச்சர் கன்னடத்தில் தெளிவாகப் பேசவும், எழுதவும், படிக்கவும், தொடர்பு கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். இருவரிடமிருந்தும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் ஜனநாயகத்தில் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. அமைச்சரை கேள்வி கேட்ட மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது .” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.