உச்சநீதிமன்றம் PT
இந்தியா

மணிப்பூர் வன்முறை: ’கருத்துகளை வெளியிட உரிமை உண்டு’ - உச்சநீதிமன்றம்

Prakash J

குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில், இதுவரை 175 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு முன்வந்திருக்கிறது. கலவரத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் என நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்

இந்த நிலையில், உண்மையான களநிலவரத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (EGI) மணிப்பூர் சென்று ஆய்வு நடத்தியது. அதன்படி, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

மணிப்பூரில் இணையச் சேவை முடக்கப்பட்டதால் செய்திகளை சேகரிப்பதில் பிரச்னை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக குறிப்பிட்ட ஊடகங்கள் ஒரு சார்பாக செய்திகளை வெளியிட்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்தது. இனக்கலவரத்தின்போது மாநில அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியது.

இதைத்தொடர்ந்து, மணிப்பூரில் மோதலை தூண்ட முயற்சிப்பதாக EGI மீது புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, EGI மீது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் EGI வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று (செப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், "மணிப்பூர் வன்முறை தொடர்பாக EGI வெளியிட்ட அறிக்கை சரியாக இருக்கலாம்; தவறாக இருக்கலாம். ஆனால், அதன் கருத்துகளை வெளியிடுவதற்கு பேச்சுரிமை உண்டு" எனத் தெரிவித்த அவர், ”புகார்களில் அவர்கள்மீது கூறப்படும் குற்றங்களில் ஒரு சிறு உண்மைகூட கிடையாது. எந்தவிதத்தில் அவர்களின் அறிக்கையின் காரணமாக இந்த குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறுகிறீர்கள்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்திய தண்டனைச் சட்டம் 153A பிரிவின் [வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும்] கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் இதன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது? அவர்கள் [EGI] தங்கள் கருத்துகளை முன்வைக்க உரிமை உண்டு. இது ஓர் அறிக்கை மட்டுமே. எதன் அடிப்படையில் அவர்கள் மீது இந்தக் குற்றத்தை சுமத்தி இருக்கிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.